பஞ்சகவ்ய தைலம் இந்த தைலம் மிக அற்புதமானது. செய்வதற்கு பொறுமை வேண்டும். பல நாட்களாகும்.
நாட்டுப் பசு காலையில் போடும் சாணத்தை எடுத்து வாழை இலை அல்லது தாமரை இலையில் சிறுக சிறுக பிரித்து காயவைக்கவும். அதேபோல் மறுநாளும் செய்யலாம். இப்படிச் செய்து மூன்று நான்கு நாட்கள் கழித்து நன்றாகக் காய்ந்த சாணத்தை எடைபோட்டுப் பார்க்க வேண்டும். இரண்டு கிலோ அளவு வந்தால் சரி. இல்லையெனில் இரண்டு கிலோ வரும்வரை சாணத்தை எடுத்து இலையில் காயவைத்து சூரணமாக்கிக் கொள்ளலாம்.
அதன் பிறகு காய்ந்த சாணத்தில் தினம் ஒரு லிட்டர் பால் வீதம் நான்கு நாள் ஊற்றிக் காயவைக்க வேண்டும். இரண்டு நாளைக்கு ஒருமுறை கூட பாலை ஊற்றி காயவைக்கலாம். ஆனால் நான்கு லிட்டர் பால் ஊற்றிக் காயவைக்க வேண்டும். அதன் பிறகு பசுவின் கோமியத்தை நான்கு லிட்டர் அந்த சாணத்தில் ஊற்றிக் காயவைக்க வேண்டும். அதன் பிறகு தயிர் நான்கு லிட்டர் ஊற்றிக் காயவைக்க வேண்டும். அதன் பிறகு அரை லிட்டர் நெய்யை ஊற்றி இரண்டு நாள் நன்றாக வெய்யிலில் காயவைத்து அதன்பிறகு குழித் தைலம் இறக்கிக் கொள்ள வேண்டும். (நெய்யை அதிகமாக சேர்க்கக் கூடாது. சிறிதளவே போதும்)
குழித்தைலம் எடுக்கும் முறை. ஒரு சிறிய பானையில் அடியில் நான்கு சிறு துளைகள் போட்டு அதனுள் இந்த பஞ்சகவ்ய சூரணம் (சாணத்தை) போட்டு அந்த பானையின் வாயை மூன்று சீலை மண் செய்து காய வைத்து, நன்கு காய்ந்த பூமியில் அந்த பானை கொள்ளும் அளவிற்கு இரண்டு அடி பள்ளம் தோண்டி (பானையின் அளவிற்கு) அந்த பள்ளத்தின் நடுவில் ஒரு சிறிய பாத்திரம் வைக்கும் அளவிற்கு சிறு பள்ளம் தோண்டி அந்த பள்ளத்தில் ஒரு சில்வர் பாத்திரம் வைத்து அதன்மீது படாதவாறு அந்த பானையை வைத்து அந்த பானையின் அளவில் பாதிக்கு மேல் வரட்டிகளை சிறியதாக ஒடித்து அடுக்கவும். பூமிக்கு மேலேயும் ஒரு அடி அளவிற்கு அடுக்கி கற்பூரம் வைத்து தீயிடவும்.(பானைக்கு கீழே உள்ள பாத்திரத்தில் மண்ணோ சாம்பலோ விழாதவாறு பார்த்து செய்யவேண்டும்.)
இதை மாலையில் செய்தால் காலையில் எச்சரிக்கையாக குழிப் புடத்தை பிரித்து ஓரம் உள்ள சாம்பலையெல்லாம் பத்திரமாக எடுத்து, பிறகு பானையை மெதுவாக மேலே எடுத்துவிட்டு கீழே வைத்துள்ள சிலவர் பாத்திரத்தில் பார்த்தால் தைலம் இறங்கி இருக்கும். அதை பத்திரமாக எடுத்து வெய்யிலில் வைக்கவேண்டும். அதில் தண்ணீர் சத்து இருந்தால் நீங்கிவிடும்.
அந்த தைலத்தை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இந்த தைலத்தை வீட்டில், கோயிலில் தீபமேற்றலாம். அதனுடைய பலனை என்ன வென்று சொல்வது. பசுவில்தான் அனைத்து தெய்வங்களும், நதிகளும், உலகங்களும், சித்தர்கள் முதல் ரிஷிகள் வரை உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.
அந்த பசுவிலிருந்து எடுக்கும் இந்த தைலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தைலத்தில் தீபமேற்றினால் அந்த வீட்டில் நன்மைகளே நடக்கும். தீயவை விலகும். இன்னும் இந்த தைலத்தைப் பற்றி பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த தைலத்தை ஒரு சொட்டு அளவு பாலிலோ தேனிலோ நாம் உள்ளுக்குச் சாப்பிட மிகுந்த நன்மை பயக்கும்.
குறிப்பு-முக்கியமான விஷயம் மேற்கண்ட சாணம், பால், தயிர், கோமியம், நெய் அல்லது வெண்ணெய் இவை ஐந்து ஓரே பசுமாட்டினதாக இருக்க வேண்டும்.
அதேபோல் காலையில் முதன் முதலில் போடும் சாணம், கோமியம், பாலாக இருக்க வேண்டும். மற்றப் பசுக்களில் இருந்து எடுக்கலாமா என்றால் எடுத்துச் செய்யலாம் தவறில்லை.
Reviews
There are no reviews yet.